அத்தம்மாவின் அலம்பல்கள் - 1



அத்தம்மாவின் அலம்பல்கள்

என் தந்தையை பெற்ற அம்மாவை தான் நாங்கள் அத்தம்மா என்று அழைப்போம்.

என் அத்தம்மாக்கு நான் ஒரே செல்ல பேத்தி.அதிலும் நான் படிப்பிற்காக சிறு வயது முதலே அம்மா வழி பாட்டி வீட்டில் வளர்ந்ததால் விடுமுறை நாட்களில் மட்டுமே அத்தம்மா, அப்பாவை காண வருவேன்.

என் தந்தையும் எனது முழு ஆண்டு விடுமுறையை ஒட்டி தான் இந்தியா வருவார்.
அத்தம்மாவிற்கு நான் என்றால் எப்பொழுதுமே ஷ்பெஷல் தான்.
என்னிடம் அவருக்கு மிகுந்த பாசம்.

அவரை பற்றிய சில இனிமையான நினைவுகள்.

எங்கள் வீடு பஸ் ஸ்டாப்பிற்கு வெகு அருகில் இருக்கும்.அது மிகவும் சிறிய ஊர் என்பதால் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தான் பஸ் வரும்.

எங்கள் வீடு திண்ணையில் தான் பஸ்ஸிற்கு போகும் நபர்கள் அமர்ந்திருப்பார்கள்.அவர்களில் பெரும்பாலும் உறவினர்கள் தான்.

திண்ணைக்கும் வரும் என் அத்தம்மா அவர்களிடம் பேசி கொண்டிருப்பார்.
1 மணி பஸ்ஸுக்கு வருபவர்களிடம் என்ன விஷயமாக செல்கிறாய்?சாப்பிடாயா என்று  கேட்பார்.அவர்கள் 12 மணிக்கே சாப்பிட்டு விட்டேன் ஆச்சி என்று சொன்னால் பரவாயில்லை நம்ம வீட்டில் ஒரு வாய் காபி சாப்பிடு பஸ் வர நேரமாகும் என்பார்.அவர் மறுத்தாலும் மருமகள்களிடம் சீக்கிரம் காபி நொறுக்குதீனி எடுத்து வா என்று விடுவார்.

அவர்கள் சில நேரம் சாம்பார், புளி குழம்பு சாப்பிட்டேன் என்று கூறினால் அவ்வளவு தான் நம் வீட்டில் இன்று மீன் வாங்கி சமைத்தேன் ஒரு வாய் சாப்பிடு என்று கட்டாயப்படுத்தி அழைத்து வந்து விடுவார்.

அவர்கள் கெஞ்ச கெஞ்ச பலமான உபசாரம் தான்.இவர் குணம் அறிந்து என் பெரியம்மா, அம்மா யார் சமைத்தாலும் 2 பேருக்கு அதிகமாக சேர்த்து தான் சமைப்பார்கள்.சில நேரம் 4 ,5 பேர் அழைத்து வந்தால் மறு உலை தான் வைப்பார்கள்.

இதில் ஹைலைட் என்னவென்றால் அவர்கள் சாப்பிடும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் பஸ் போய் விடும்.அப்புறமென்ன அடுத்த பஸ் வரும்வரை பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான் :)

என் அத்தம்மாவின் இந்த கவனிப்பிற்கு பயந்து சில பேர் தப்பிக்க நினைத்தாலும் என் அப்பா கூப்பிட்டு விடுவார்.

ஒருமுறை நான், அம்மா, அத்தம்மா ,என் பெரியப்பா மகன் நால்வரும் கண் செக்கப்பிற்கு சென்றோம்.

அத்தம்மாவிற்கு தான் செக்கப்.அம்மாவிற்கு அடிக்கடி தலைவலி வருவதால் அவரையும் செக்கப் செய்து கொள் என்று அத்தம்மா கூறினார். இருவர் கண்ணிலும் ட்ராப்ஸ் போட்டு உள்ளே சென்றாகி விட்டது.

முதலில் அத்தம்மாவிற்கு தான் செக்கப்.படிக்க டாக்டர் ஆங்கில எழுத்து, தமிழ் எழுத்து காட்டுகிறார் அத்தம்மாவிற்கு படிக்க தெரியாது.

உடனே அத்தம்மா என்ன செய்தார் தெரியுமா? கையோடு எடுத்து சென்றிருந்த கையடக்க குரானை எடுத்து ஓத ஆரம்பித்து விட்டர்.இப்பொழுது டாக்டர் முழிக்கிறார்.

எனக்கு தெரியாதுமா நீங்க படிக்கிறது என்றதும் என் பேரன் பேத்திக்கு தெரியும் நான் சரியாக தான் படிக்கிறேன் என்று சொல்கிறார்.அப்பொழுது நான் நான்காவதும் அண்ணன் ஆறாவதும் படித்தோம்.

பிறகு என் அம்மாவை அழைத்து கூறியதும் அவர் உடனே நம்பர் காண்பியுங்கள் டாக்டர் எண்று கூறி நிலைமையை சரி செய்தார்.

அந்த டாக்டர் பட்ட பாட்டை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இப்படி என் அத்தம்மாவை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.
பதிவு நீளமாக செல்வதால் இன்னொரு பதிவில் மீதியை தொடர்கிறேன்.

2 கருத்துகள்:

  1. அத்தம்மாவை பற்றிய பதிவு அருமை ஷமி. அப்போதுள்ள பாசமே தனி தான்.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி அம்மா...
    உண்மைதான் சாரதாம்மா அப்பொழுது இருந்த பாசம் விலை மதிக்க முடியாதது தான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes